சென்னை: புழல் காவாங்கரை மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் ஹோட்டல் நடத்தி வரும் யோகேஷ் என்பவர் (வயது 31) பெங்களூரிலிருந்து மது பாட்டில்களைக் கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாகக் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையாளரின் தனிப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, யோகேஷ் வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில், யோகேஷ் அங்கு இல்லை. மேலும், அவரது வீட்டிலிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் தனது வீட்டுக்கு வந்து சென்ற தகவலை அறிந்த யோகேஷ், புழல் கதிர்வேடு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சையது சர்ப்ராஸ் நவாஸ் (வயது 41) என்பவரின் உதவியை நாடியுள்ளார்.
கையில் துப்பாக்கி: சையத் சர்ப்ராஸ் நவாஸ் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, ராஜமங்கலம் காவல் நிலைய போலீசாரிடம் பேசி, 200 அடி சாலையில் உள்ள ஒரு பள்ளி அருகே யோகேஷை அழைத்து வந்தார். அதன் பின்னர், ராஜமங்கலம் போலீசாரிடம் யோகேஷை ஒப்படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனிப்படையினர் யோகேஷின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அப்போது யோகேஷ் கையில் துப்பாக்கியுடன் இருந்த போட்டோக்கள் இருந்ததைக் கண்ட போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்குகாய்ச்சல்..! பீதியில் மக்கள்!
கள்ளத்துப்பாக்கி விற்பனை: விசாரணையில் உத்திர பிரதேசத்திலிருந்து துப்பாக்கியை வாங்கி வந்ததாகவும், சையது அபுதாஹீர் என்பவர் மூலம் துப்பாக்கியை விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சையத் அபுதாஹீர் (வயது 42) என்பவரின் வீட்டிற்குச் சென்ற தனிப்படையினர் ஒரு துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். மேலும், சையத் அபுதாஹீர் மீது அம்பத்தூரில் ஒரு கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர விசாரணை: இவர்களுடன் தொடர்புடைய புழல் காவாங்கரையைச் சேர்ந்த கறிக்கடை ஊழியர் ரஹ்மத்துல்லா (வயது 31), முத்தார் (வயது 21) என மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் எத்தனை ஆண்டுகளாகக் கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பயங்கரவாத கும்பலுடன் ஏதேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொத்துக்காக சகோதரன் கொலை.. திண்டுக்கல்லில் நடந்தது என்ன?