மதுரை: திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்தது.
அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், உதகமண்டலம் உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளை கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த மருத்துவ கட்டடங்கள் கட்டுவதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. உதாரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 77ஆயிரத்து 482 சதுர அடி கட்டடம் கட்டப்படவில்லை.
இதன்மூலம் 52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல 11 மருத்துவக் கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து பெரும் தொகை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) ராஜ்மோகன், முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை முதன்மைச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.கே.வார்ட்ஸ் ஆகியோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் கடந்த 2021 ஆண்டு ஜூலை 7ஆம் தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மனுதாரர் கொடுத்துள்ளப் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலைப் பெற வேண்டியதுள்ளது. எனவே, அரசின் ஒப்புதலுக்கு ஊழல் கண்காணிப்புத்துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன' என்று கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: "10% இட ஒதுக்கீட்டில் 77 சாதிகள் இருப்பதாக மாயத்தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது"