சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பேரணியாக சென்று மனு அளிக்கப்பட்டது.
சென்னை தீரன் சின்னமலை பகுதியில், திமுக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, அங்கிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக சென்றனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு முன்னெடுப்புகளை அவர் எடுத்து வருகிறார். குறிப்பாக, ஓபிஎஸ் தரப்பினரை எதிர்கொள்வதைக் கடந்து, திமுகவின் மீது எதிர்ப்புகளை அதிகளவில் திருப்பியுள்ளார். சமீபத்தில், கள்ளச்சாராய மரணங்கள், பிடிஆரின் ஆடியோ விவகாரம் போன்றவற்றில் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரங்களை எதிர்க்கட்சி என்ற முறையில் முன்னெடுக்க நினைக்க எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. திமுகவிற்கு எதிரான பல சம்பவங்களை ஒன்று திரட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
இதற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சி அமைந்தது முதல் தற்போது வரை பல்வேறு துறைகளில் நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் அளித்து உள்ளோம். புகார்களை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் கொலை செய்தனர். சேலம் மாவட்டத்தில் கொலை முயற்சி செய்துள்ளனர்.
நேர்மையான அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிர் இழந்துள்ளனர். 60 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இதற்கே உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், தஞ்சாவூரில் அனுமதி இல்லாத பாரில் மது அருந்தி இரண்டு பேர் உயிர் இழந்துள்ளனர். போலி மதுபானம் காரணமாகவே உயிர் இழந்தனர் என வெளியே தெரியக் கூடாது என்பதற்காக அதிகாரிகளை வைத்து பொய் சொல்கின்றனர். கள்ளச்சாராயம் விற்றதாக தற்போது தொடர்ந்து புகார் பதிவு செய்கின்றனர்.
காவல் துறைக்கு தெரிந்தே இது நடைபெற்று உள்ளது என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் முறையாக நடவடிக்கை எடுத்து இருந்தால் தஞ்சாவூரில் இரண்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்காது, அவர்களின் உடலை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மை தெரிய வரும். அதிமுக காலத்தில் கள்ளச்சாராயம் இருப்பதாக தற்போது அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், திமுக தாக்கல் செய்த கொள்கைக்குறிப்பில், கடந்த 13 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட தற்போது அதிக அளவில், பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல தமிழ்நாட்டில் 75% பார்கள் அனுமதி இல்லாமல் விற்பனை நடைபெற்று வருகின்றன. சென்னையில் 97 பார்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் மதுபானங்கள் கிடைக்கின்றன. மிகப்பெரிய ஊழல், இதன்மூலம் நடைபெற்று வருகிறது. அதேபோல ரெட்ஜெயன்ட் நிறுவனம், ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மத்திய அமைப்புகள் மூலம் மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: பூரண மதுவிலக்கு குறித்து திமுக வாக்குறுதி அளிக்கவில்லை - கனிமொழி பேட்டி