சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும், மழைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படுத்தப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் டெங்குகாய்ச்சல், இன்புளூயன்சா காய்ச்சல் போன்றவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், இதனைக் கட்டுப்படுத்துகின்ற நோக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் பொதுச் சுகாதாரத்துறை இணைந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாம்களில் 9 மாதம் முதல் 15 வயது வரையிலான இளம் சிறுவர், சிறுமிகளுக்குத் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணியானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அன்று 51 மருத்து முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், அதன் பின், நகரின் முக்கிய இடங்களில் மட்டும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனையடுத்து, கடந்த 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 700க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 14 நாட்களில் நடத்தப்பட்ட 6,152 தொடர் மருத்துவ முகாம்கள் மூலம் 4,00,477 நபர்கள் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணிகளை டிச.17-க்குள் முடிக்க உத்தரவு!