சென்னை மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்ததாக மேம்படுத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக மெரினா கடற்கரையில் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனை இன்று (நவ.6) மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் துறை உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகையில், "மெரினா கடற்கரை பகுதியையும், லூப் சாலை பகுதியையும் ஒழுங்குபடுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசும், உயர் நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.
டிஜிபி அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியால் லூப் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பிரச்னை இல்லாமல் உள்ளது. தற்போது இந்த சாலையில் இருபுறங்களிலும் மீனவர்கள் மீன்களை விற்பனை செய்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது.
இதனை சரி செய்யும் வகையில் லூப் சாலையில் உள்ள சுமார் 300 கடைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு அனைத்தையும் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். உணவுப் பொருட்களை சுகாதாரமாக, நவீன முறையில் விற்பனை செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தப் பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் நிறைவடையும். இதற்கு வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
அதுவரை லூப் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படும். காவல்துறையினர் இதனை தொடர்ந்து கண்காணிப்பர்" என்றார்.
மெரினா கடற்கரையில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "மெரினாவில் தள்ளு வண்டி கடைகளில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு மத்திய அரசு உதவியுடன் 900 தள்ளு வண்டிகள் வழங்கப்படும்.
மெரினா கடற்கரையில் விதிமுறைகளை முறையாக பின்பற்ற தனிக்குழு அமைத்து கண்காணிக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மாநகராட்சி ஆணையரை நடைபயிற்சி செல்ல அறிவுறுத்திய நீதிபதிகள்