தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தம் பொருட்டு, சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை மேல் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துகொண்டு ராட்சத பலூனை பறக்கவிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தேர்தல் ஆணையம் கூறியுள்ள விதிமுறைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இதுவரையிலும் 26 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள், 7.30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டன.
நேற்று (மார்ச் 29) ஒரேநாளில் 6.85 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள், ஐந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இன்று (மார்ச் 30) காலை 1.30 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களைப் பறக்கும் படையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
சென்னையில் 577 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 30 வாக்குச்சாவடிகள் சிக்கலானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும்.
காவல் துறையினர் அல்லாமல் 28,000 நபர்கள் தேர்தல் பணியில் உள்ளனர். இதில் 5,000 நபர்கள் அஞ்சல் வாக்குச் செலுத்திவிட்டனர். ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் அனைத்து அஞ்சல் வாக்குகளும் முடிந்துவிடும்.
மொத்தம் 23,000 பெட் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் முடிந்த உடன் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். சென்னையில் 39,000 தெருக்களில் 358 கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் உள்ளன. வருங்காலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், அதனைச் சமாளிக்கும் பலம் மாநகராட்சியிடம் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நேபாள ராணுவத்திற்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா