சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு (CSR) நிதியின் கீழ் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்வது குறித்து தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சாலையோரங்கள், சாலை மைய தடுப்புகளில் மரக்கன்றுகளை நடவு செய்து அழகுபடுத்துவது, அரசு, மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய கட்டட சுவர்களில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான வண்ண ஓவியங்களை வரைதல், மாநகராட்சி பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பொது கழிவறைகளை தூய்மையாக பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு, நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அழகுபடுத்தும் பணிகள் குறித்து சென்னை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட மாதிரி படங்களின் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள பணிகள் குறித்தும், இடம் குறித்தும் சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்களை அணுகி விரிவான திட்ட அறிக்கையை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மாநகரை அழகுபடுத்தவும், சமூக பங்களிப்பு நிதி வழங்கவும் ஆர்வமுள்ள தனியார், தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியின் https://forms.gle/CFtSbqfgpR9uzA8LA என்ற இணையதள இணைப்பில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்யலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாநகராட்சி ஒப்பந்தங்களில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!