கரோனா ஊரடங்கால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிக்கக் கூடும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பிரபல குழந்தைகள் நல ஆர்வலர் ஆண்ட்ரூ செசுராஜ் கூறுகையில், "கரோனா ஊரடங்கால் பலர் தங்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையே இழக்க நேரிட்டுள்ளது. வறுமை என்று வரும் போது பட்டினியா, படிப்பா என்று பார்த்தால் பலர் இயல்பாக பட்டினியை போக்க வழிகளை தேட முயல்வார்கள்.
இந்த நேரத்தில் தான் குழந்தைத் தொழில், கடத்தல், குழந்தை கல்யாணம் ஆகிய நிகழ்வுகளும் நடைபெறும். இனி வரும் காலத்தில் குழந்தை உழைப்புக்கு எதிரான சர்வதேச தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருத வேண்டிய அவசியம் இருக்கிறது.
முதலில் குழந்தைகளை பாதுகாக்க 18 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவினை வலுப்படுத்த வேண்டும். கிராமங்களில் உள்ள குழந்தைகளை பாதுகாத்தாலே பெரும்பான்மையான குழந்தைத் தொழிலாளிகளை தடுக்க முடியும்.
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினை சரியாக அனைத்து கிராமங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளிகளின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, ஆறு மாதங்களுக்கு பத்து ஆயிரம் ரூபாய் அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டும்.
இதன் மூலம் குழந்தைகள் வேலைக்கு செல்லவிடாமல் தடுத்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இதை தடுக்கும்விதமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொலைப்பேசி மூலம் குழந்தைகளை தொடர்பு கொண்டு பேச வேண்டும்.
அதே போன்று அங்கன்வாடி மூலம் மதிய உனவு வழங்கும் திட்டத்தை உடனடியாக செய்லபடுத்த வேண்டும்” என்றார்.
2011ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 5 முதல் 14 வயது வரை 259. 6 மில்லியன் குழந்தைகள் இருக்கின்றனர். அதில், 3.9 விழுக்காடு 10.1 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளிகளாக உள்ளனர் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஆந்திராவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!