கரோனா வைரஸ் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு தமிழ்நாட்டில் மேலும் ஒரு ஆய்வகத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் என 73 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. பத்தாயிரத்து 558 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 91 நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாட்டில் வசித்து வந்த 1,036 நபர்களுக்கும், துபாயில் இருந்து வந்த 2 பேர், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த 8 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்த மூன்று பேர், கேரளாவிலிருந்து வந்த இரண்டு பேர் என ஆயிரத்து 91 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 24 ஆயிரத்து 586 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 680 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 ஆயிரத்து 176 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி 13 பேர் இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. சென்னை கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 வயது பெண்மணி கரோனா வைரஸ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மே மாதம் 28ஆம் தேதி இறந்தார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 55 வயது பெண்மணி சிகிச்சை பலனின்றி 29ஆம் தேதி இறந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நான்கு பேர் சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன்பு இறந்தனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரோனா வைரஸ் சிகிச்சை அளிப்பதற்கான குழுவில் முக்கிய மருத்துவர்கள் உள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 72 வயது முதியவர் உயிரிழந்தார். இறந்த அனைவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்புடன் வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக கரோனா பாதிப்பு
வரிசை எண் | மாவட்டங்கள் | பாதிப்பு |
1 | சென்னை | 16,585 |
2 | செங்கல்பட்டு | 1,308 |
3 | திருவள்ளூர் | 1,025 |
4 | கடலூர் | 463 |
5 | திருவண்ணாமலை | 444 |
6 | காஞ்சிபுரம் | 433 |
7 | அரியலூர் | 370 |
8 | திருநெல்வேலி | 366 |
9 | விழுப்புரம் | 349 |
10 | மதுரை | 269 |
11 | கள்ளக்குறிச்சி | 250 |
12 | தூத்துக்குடி | 277 |
13 | சேலம் | 206 |
14 | கோயம்புத்தூர் | 151 |
15 | பெரம்பலூர் | 142 |
16 | திண்டுக்கல் | 147 |
17 | விருதுநகர் | 127 |
18 | திருப்பூர் | 114 |
19 | தேனி | 114 |
20 | ராணிப்பேட்டை | 100 |
21 | தஞ்சாவூர் | 96 |
22 | திருச்சி | 95 |
23 | தென்காசி | 90 |
24 | ராமநாதபுரம் | 85 |
25 | நாமக்கல் | 82 |
26 | கரூர் | 81 |
27 | ஈரோடு | 74 |
28 | கன்னியாகுமரி | 76 |
29 | நாகப்பட்டினம் | 63 |
30 | திருவாரூர் | 49 |
31 | வேலூர் | 47 |
32 | சிவகங்கை | 35 |
33 | திருப்பத்தூர் | 36 |
34 | கிருஷ்ணகிரி | 28 |
35 | புதுக்கோட்டை | 27 |
36 | நீலகிரி | 14 |
37 | தருமபுரி | 8 |
சென்னை மாநகராட்சியில் 7ஆயிரத்து 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில் மற்றும் விமானங்களின் மூலம் வந்த ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 309 நபர்களில் ஆயிரத்து 683 பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ரயில்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு திரும்பிய 10 ஆயிரத்து 270 நபர்களில் 9ஆயிரத்து 650 நபர்களுக்கு சளி பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டன. 193 பேரின் மாதிரிகள் ஆய்வகத்தில் நடைபெற்று வருகிறது. 9ஆயிரத்து 210 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 247 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு விமானங்கள் மூலம் வந்த 23 பேருக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.