கோவிட்-19 வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திரையரங்குகள், மால்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் முதல் கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவரும் கரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகள் தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கலந்தாய்வு கூட்டங்களை நடத்திவருகிறார்.
அவ்வாறு இன்று ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்குகொள்ள தலைமைச் செயலகம் வந்திருந்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சோதனையை சுகாதாரத் துறையினர் செய்தனர்.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 93.1 பாரன்ஹீட் உடல் வெப்பநிலை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு 98.6 பாரன்ஹீட் உடல் வெப்பநிலை காட்டியதாகச் சுகாதாரத் துறை அலுவலர் அவர்களிடம் கூறினார்.
தற்போது சட்டப்பேரவை நடந்துவருவதால், சட்டப்பேரவைக்கு வரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சட்டப்பேரவை நான்காவது வாயில் வழியாக வரும் உறுப்பினர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்துகொண்ட பிறகே தலைமைச் செயலகத்துக்குள் செல்கின்றனர்.
இதையும் படிங்க : 'மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இந்தப் பேரிடரைச் சமாளிக்க முடியும்'