உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஆவடி வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் 13 வயது சிறுமி உள்பட நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதிகளை முற்றிலும் சீல் வைக்கப்பட்டது .
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேலும் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் உள்ள ஜேபி எஸ்டேட் இருபத்தி நான்காவது தெரு மற்றும் நேரு தெரு பகுதிகளில் சாலைகள் முழுவதும் அடைத்து இன்று சீல் வைக்கப்பட்டன.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை எட்டு நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் "ஆவடியில் மேலும் நான்கு பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட பகுதி முழுவதும் மூடி சீல் வைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மேலும், ஆவடி மாநகராட்சி சார்பில் செயல்பட்டுவரும் நடமாடும் காய்கறிகள், மளிகை பொருள்கள் வாகனங்களை பயன்படுத்தி தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளவும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க: பல மைல் தூரம் பயணம்! கூலித் தொழிலாளர்களுக்கு உதவிய அறக்கட்டளை!