‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்துவருகிறது. சுமார் 1.65 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு பிரித்து அனுப்பி உள்ளது. அதில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் சென்னைக்கு வந்துள்ளன.
இதேபோல் தெலங்கானா மாநிலத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் 166 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையில் 12 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதாரப் பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு 12 ஆயிரத்து 052 கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மருத்துவமனையில் முதல் கரோனா தடுப்பூசியை அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் பிரதாப் ரெட்டி போட்டுக்கொண்டார்.
ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் 6774, ஸ்டான்லி மருத்துவமனையில் 3091, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2734, எம்ஜிஎம் மருத்துவமனையில் 1337 உள்ளிட்ட 12 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று தடுப்பூசி போடப்படுகிறது. இதில் அரசு மருத்துவமனையை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு 13 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையை காட்டிலும் தனியார் மருத்துவமனைக்கு முக்கியத்துவம் கொடுத்தது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்து தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையையும், தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 2 மாதத்துக்குள் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 2-வது தவணையாக 28 நாட்கள் கழித்து மீண்டும் தடுப்பூசி போடப்படும். இதன்மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டு கரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்