சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 66 வயது நபர் ஒருவர், வாட்ச் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 13ஆம் தேதி முதல் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அதே மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நபர், ஒருவருக்கு கரோனா தொற்று இருந்துள்ளது. இதனால், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த வாட்ச் மேனுக்கும் கரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி, அவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் வாட்ச் மேனுக்கும் கரோனா தொற்று இருப்பது சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
அதன்பின் இவரைக் கடந்த 24ஆம் தேதியன்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி, வாட்ச் மேன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவருக்கு கரோனா இருந்துள்ளதால், இவருடன் அடையார் மருத்துவமனையில் தங்கி இருந்த இவரது மனைவிக்கும், மகனுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இறந்தவரின் மனைவிக்கு கரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
ஆனால், அவரது மகனுக்கு நேற்று கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் இவர் ஸ்விகியில் டெலிவரி பாயாக கடந்த 25ஆம் தேதி வரை பணிபுரிந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனால், இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த இவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதோடு, இவர்களது தெருவையும் தனிமைப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் ஆண்களே அதிகம் உயிரிழப்பர் - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!