தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் சோதனை நடைபெற்றது. அதை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் நேற்று ஆய்வுசெய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், “தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகளுடன் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காகத் தயார் நிலையில் உள்ளன.
மேலும் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சென்னை மாநகராட்சியுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைந்து இன்று (ஏப்ரல் 14) 26 இடங்களில் உரிய விதிமுறைகளுடன் மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்கள் ரத்த மாதிரிகளைப் பெற்றுவருகின்றனர்.
இதனையடுத்து 40 இடங்களில் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் அவருடன் தொடர்பு உடையவர்கள், அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனை அதிகரித்து பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் முகாம் நடத்தி பரிசோதனை செய்யவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'தொழிற்சாலைகளை இயக்க மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது' - அன்புமணி ராமதாஸ்