சென்னையில் கரோனா தொற்று தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாகப் பரவிவருகிறது. இந்தத் தொற்றைக் குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகிறது. இன்று (ஆக. 29) 478 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற 478 மருத்துவ முகாம்களில் மொத்தம் 20 ஆயிரத்து 112 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 1275 நபர்களுக்கு தொற்றின் அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும் நாளை சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் மொத்தம் 420 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 8ஆம் தேதிமுதல் இன்றுவரை மொத்தம் 39 ஆயிரத்து 862 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
அதில் 21 லட்சத்து 53 ஆயிரத்து 249 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ முகாம்கள் மூலம் மொத்தம் 20 ஆயிரத்து 788 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.