சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வரும் நிலையில், வானகரம் அப்போலோ மருத்துவமனை மூத்த மருத்துவ ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "முதல் அலையைவிட இரண்டாவது அலையில் கரோனா தொற்றின் வீரியம், பரவும் வேகம் அதிகமாக உள்ளது. நோய் தொற்று உள்ளவர்களுக்கு இரண்டாவது அலையில் காய்ச்சல், உடல்வலி, அசாதாரணமான சோர்வு, மாலை நேரங்களில் குளிர் நடுக்கம் ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து காய்ச்சல் வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சளி, இருமல் வருவது கிடையாது. ஒரு சிலருக்கே காய்ச்சல் வருகிறது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தானாகவே மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுகின்றனர். கரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதுடன் குடும்பம், குடும்பமாக பாதிப்பிற்குள்ளாகின்றனர். இந்த அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் வாரத்திலேயே சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த அலையில் சிடி ஸ்கேன், பல்ஸ்ஆக்சி மீட்டர் மூலமே பாதிப்பை கண்டறிய முடிகிறது. கடந்த முறை இந்தளவு பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த முறை வெளிநாடுகளில் இதேபோன்ற பாதிப்பு இருந்தது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தொற்றின் பாதிப்பை பொறுத்தே சிகிச்சை அளிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களை மூன்று வகையாக பிரித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம். காய்ச்சல் ஏற்பட்ட நாளில் இருந்தே நீர்சத்து அதிகம் தரும் உணவுகளை உண்ண வேண்டும்.
தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து சிறிதளவு நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கிறது என கூறுகின்றனர். ஆனால், இது தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எந்த பலனும் அளிக்கவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறைந்தளவு கரோனா பாதிப்பை எதிர்கொள்கின்றனர்" என்றார்.