சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை மாற்று வாரியப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி கரோனா பரவாமல் தடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஆயிரத்து 979 பகுதிகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுபோன்ற பகுதிகளில் நெருக்கமாக வாழும் மக்களுக்கு நோய் தொற்று தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கரோனா பயப்படக்கூடிய ஒன்று அல்ல. தொற்று அறிகுறிகள் இருந்தால் பயமின்றி சோதனைகள் செய்துகொள்ள முன் வர வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிதாக கரோனா சிகிசைக்காக பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் கொண்ட இடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும். இதுபோன்ற கேம்ப் தயாராகிவருகிறது. அங்கு இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் நிறைவு பெற உள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை உடனடியாக தனிமைப்படுத்துகிறோம். இதனால் நோய் தொற்று பரவல் தடுக்கப்படுகிறது.
மாநகராட்சி ஊழியர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு காட்சிகள், நாடகங்கள் போன்றவை நடத்தப்பட்டு மக்களுக்கு தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.