தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அத்துறையின் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அமைச்சர்கள் தலைமையிலும் பல்வேறு உயர் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், தனிக் கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
இதன் காரணமாக, அப்பகுதிகளில் தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அளவு குறைந்துள்ளது. இதில், குறிப்பாக சென்னை சமூக களப்பணி திட்டத்தின் மூலம் வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவை இருந்தால் அவர்களை உடனடியாக கண்டறிந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்த நபர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப் படுத்துவதற்காக 50 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உணவு உள்பட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக, ஜூன் மாதத்தில் சராசரியாக 242 விழுக்காட்டில் இருந்த நோய்த் தொற்று விகிதம் தற்போது, ஜூலை மாதத்தில் சராசரியாக 18.2 விழுக்காட்டிற்கு நோய்த் தொற்று குறைந்து உள்ளது.” எனத் தெரிவித்தார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள், மழைநீர் வடிகால் திட்டப் பணிகள், 197 பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார் .
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பசுமை வீடு திட்டம் , ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் , நபார்டு திட்டம் குறித்தும் கேட்டறிந்து, நபார்டு திட்டத்திற்கான பணிகளை துவங்கி விரைந்து முடித்திடவும் உத்தரவிட்டார். இறுதியாக, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை துரிதபடுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.