சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி பின்வருமாறு:-
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை மட்டும் அல்லாமல் சென்னை சுற்றியுள்ள மாவட்டங்கள், பிற மாவட்டங்களிலும் எடுக்கப்பட்ட பல்முனை நடவடிக்கை காரணமாக, தற்போது தொற்று குறைந்து வருகிறது.
கரோனா பரிசோதனைகளை அதிகரித்ததுடன், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்டறிந்து, அங்கு பணியாளர்களை நியமனம் செய்து, தொடர்ந்து கண்காணித்தோம்.
பல்முனை நடவடிக்கை
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த சிலர், மூச்சுத் திணறல் ஏற்பட்டப் பின்னர் மருத்துவமனைக்கு வந்தனர்.
சிலர் முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நம்பிக்கை ஊட்டினோம்.
மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினருடன் இணைந்து, பல்முனை நடவடிக்கையை மேற்கொண்டோம். இதனால் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது.
பொதுமக்களே கவனம்; விதிகளை மீறாதீர்கள்!
கரோனா தொற்று 55 விழுக்காடு குறைந்துவிட்டது என, அலட்சியப்போக்குடன் பொது மக்கள் இருக்கக்கூடாது.
கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கரோனா தொற்று குறைந்து விட்டது என நினைத்த நிலையில், மே மாதம் அசுர வேகம் எடுத்தது.
ஆகவே, தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொது மக்கள் அனைவரும் தேவையில்லாமல் அடிக்கடி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
சித்த மருத்துவத்திற்கு அனுமதி
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகளில், குழந்தைகளுக்கு ரெமிடெசிவிர் மருந்து அளிக்கக்கூடாது.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக்கூடாது. அலோபதி, சித்தா மருத்துவ முறைகளை தொடர்ந்து அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுக்குள் வரும் கரோனா
முதல் அலையை விட, தற்போது 57 விழுக்காடு மருத்துவக் கட்டமைப்பை அதிகரித்துள்ளோம். படுக்கை வசதிகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம்.
தனிமைப்படுத்தும் கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை அமைச்சர்களுடன் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
கிராமப்புறங்களில் கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்ற நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி இருப்பு
ஒன்றிய அரசு கரோனா தடுப்பூசி வழங்கி வருகிறது. தடுப்பூசி குப்பிகள் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அதனையும் தெரிவித்தோம். ஒன்றிய அரசிடம் இருந்து தற்போது தடுப்பூசி பெறப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசு இன்று (ஜூன்.11) 3.5 லட்சம் தடுப்பூசியை தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறது. அவை மாவட்டங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
ஒன்றிய அரசு தடுப்பூசிகளுக்கான உற்பத்தியை அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் தினமும் 2 லட்சம் தடுப்பூசி போடும் அளவிற்கு திறன் உள்ளது”என்றார்.
இதையும் படிங்க:EXCLUSIVE: 'தமிழ்நாட்டில் நீட் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி