சென்னை: கிண்டி கிங்ஸ் கரோனா மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்வதற்கான பேட்டரி வாகனத்தை இன்று (ஆகஸ்ட்.18) பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் இயக்கமாக செயல்பட்டு ஏராளமான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். முதலமைச்சர் அறிவித்த பன்னோக்கு மருந்துவமனைக்கான கட்டுமான பணிகள் கிண்டி கிங்ஸ் வளாகத்தில் விரைவில் தொடங்க உள்ளது.
சிறப்பாக செயல்படுகிறது
மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 58,341 பேர் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், 36,765 நீரிழிவு நோயாளிகளுக்கும், இரு நோய்களும் பாதிக்கப்பட்ட 25,787 பேருக்கும் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 18 பேருக்கு சுய டயாலிசிஸ் கருவியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,28,361 பேர் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர் .
தமிழ்நாட்டில் இதுவரை 39,08,250 கோவாக்சின் டோஸ் வந்துள்ளது. 36,31,540 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 4 லட்சம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி தேவைப்படுகிறது. இந்த தகவல் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி வந்ததும் இரண்டாம் தவனை செலுத்த வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளித்து செலுத்தப்படும். தற்போது கோவாக்சின் தடுப்பூசி முதல் தவனை யாருக்கும் செலுத்தப்படுவதில்லை.
காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
விரைவில் உருமாற்றமடைந்த கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் டிஎம்எஸ் வளாகத்தில் துவங்கப்பட உள்ளது. அதனை முதலமைச்சர் திறந்து வைப்பார். ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 10ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை எனவும், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கோரிக்கை போராட்டம் என்பது வழ்க்காமாக நடைபெறும் ஒன்று தான். சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பிறகு சுகாதாரத்துறையில் ஒவ்வொரு துறையாக அழைத்து பேசி காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கில் என்னையும் சேர்க்க திமுக அரசு சதி - இபிஎஸ்