சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் பொது போக்குவரத்து, தியேட்டர்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
செப். 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இந்தநிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1,587ஆக இருந்த பாதிப்பு நேற்று (செப்.9) சற்று அதிகரித்து 1,596ஆக உள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (செப்.10) சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், "தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. வரும் காலங்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனால் தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து கண்காணிப்பதுடன், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தகுதியானவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ளாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம் - பிரதமர் மோடி ஆலோசனை