சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு செல்லும் நிலை குறித்து கூறியுள்ள தகவலில், ”தேசியளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இன்று காலை 5233 என பதிவாகியுள்ளது. இந்த தொற்று பாதிப்பு நேற்று 3714 என இருந்தது. ஒரே நாளில் 41% நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரித்து கேரளாவில் 2771 நபர்களுக்கும், மகாராஷ்டிராவில் 1881 நபர்களுக்கும், மும்பையில் 1242 நபர்களுக்கும், டெல்லியில் 450 நபர்களுக்கும், கர்நாடகாவில் 348 நபர்களுக்கும், பெங்களூரில் 339 நபர்களுக்கும் நேற்று(ஜூன் 7) பதிவாகியிருந்தது.
இந்த மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பறவைகளிடம் குறைவாகவே இருக்கிறது. இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக வரக்கூடிய தகவலின் அடிப்படையில் நோய்த்தொற்று பரவல் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து 200 அல்லது அதற்குமேல் வரக்கூடிய நாட்களில் நோய் பரவல் வீதம் பதிவு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கல்வி நிறுவனத்தில் 245 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 29 மாணவர்களுக்கு நேற்று(ஜூன் 7) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வரக்கூடிய புள்ளிவிவரங்களைத் தீர ஆய்வு செய்ததில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினமும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகிறது.
மேலும், 12 மாவட்டங்களில் அவ்வப்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த வகை வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து மரபணுப் பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
பொது மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்லும் பொழுது முறையாக முகக் கவசங்களை அணிந்து செல்ல வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைமானிகளைக் கொண்டு கல்வி நிறுவனம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில மால்கள் மற்றும் தியேட்டர்களில் செயல்படாத வெப்ப பரிசோதனைகளை பெயரளவில் வைத்துள்ளனர். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
தகுதியுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசியினை செலுத்த வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புபவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருபவர்கள் மற்றும் நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது தான் அவர்களைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொண்ட பின்னர் இரண்டு, மூன்று நாட்கள் வெளியில் வராமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுபவர்கள் சாதாரண அறிகுறிகளுடன் நன்றாக இருக்கின்றனர்.
கரோனா தொற்று அதிகரித்து பாதிப்பு ஏற்பட்டாலும் அதனைக் கையாளுவதற்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட அறிவுரைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்: அயனாவரம் காவல் ஆய்வாளர் இடமாற்றம்