சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி அலுவலர்களுடன் சேர்ந்து காவல்துறையினரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதனால் சென்னையின் முக்கியமான பகுதிகளில் உள்ள வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நாள்தோறும் 2 ஆயிரம் பேர் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரமாக குறைந்து வந்துள்ளது.
இதனை இன்னும் குறைவாக மாற்றும் வகையில், கரோனாவைக் கட்டுப்படுத்த சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை முழுவதும் உள்ள 135 காவல் நிலையங்களில் உள்ள உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து காவலர்களும் மக்கள் அதிகமாக நடமாடும் நேரமான 10 முதல் 11 மணி வரை கரோனா விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
அந்த அடிப்படையில் திருவான்மியூர் உதவி ஆணையர் ரவி அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோரை பயன்படுத்தி திருவான்மியூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டார். முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளி கடைபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 'கரோனா கேக், முகக்கவச பரோட்டா, கோவிட்-19 தோசை' - விழிப்புணர்வின் உச்சத்தில் உணவகங்கள்