கரோனா பரவலால் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் விதிமுறையை பின்பற்றி பல்வேறு இடங்களில் திருமணம் நடைபெறுகிறது. ஒரு சிலர் வீடியோ கால் மூலம் திருமணங்களை பார்க்கும் நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், சுகாதார ஆய்வாளர் ஒருவர் கரோனா விழிப்புணர்வு வாசகங்களுடன் மகளின் திருமண அழைப்பிதழை அச்சிட்டு வழங்கி வருகிறார். பூவிருந்தவல்லி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக இருப்பவர் வெங்கடேசன். இவரது இரண்டாவது மகள் லோகேஸ்வரிக்கு, யாக்கேஷ் என்பவருடன் அம்பத்தூரில் உள்ள கண்ணாத்தம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்று பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்காக திருமண வரவேற்பு அழைப்பிதழ் அச்சிட்ட வெங்கடேசன், மற்றவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, கரோனா விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், "கரோனாவை வெல்வோம் என்ற தலைப்பில் திருமணத்திற்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதலின் படி திருமண நிகழ்வுகள் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறைகளை பின்பற்றுவது அசெளகரியமாக கருதுபவர்கள் திருமணத்திற்கு நேரில் வராமல் மனதளவில் வாழ்த்துவது மட்டுமே போதுமானதாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார ஆய்வாளரின், இம்முயற்சியை அரசு அலுவலர்களும், பொதுமக்களும் மனதார பாராட்டி வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு குடும்பத்தில் ஒருவர் வந்தால் போதும் குடும்பமாக வரவேண்டாம் என்று அழைப்பிதழ் விடுப்பவர்களிடம் தெரிவித்து வருகிறார்.
இதையும் படிங்க: 'திமுகவை போல் அதிமுக மாறிவருகிறது'- கொதிக்கும் பாஜக பிரமுகர்!