தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் என்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் தெருவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதி சுகாதார அலுவலர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 14 நாள்கள் நோய்த் தொற்று இல்லாத பட்சத்தில், அப்பகுதி தளர்வு பகுதியாக அறிவிக்கப்படும்.
![கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தளர்வு பகுதியாக மாற்றம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7381552_431_7381552_1590662941059.png)
இந்த நிலையில், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 14 நாள்கள் நோய்த் தொற்று ஏதும் இல்லாததால், 846 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தளர்வு பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 143 பகுதிகள் தளர்வு பகுதியாக மாறியுள்ளது.
![அடைப்பு வேலிகள் அகற்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-containment-zone-script-image-7209208_28052020155720_2805f_1590661640_431.jpg)
இன்றைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் 305 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி ராயபுரம் - 90 பகுதிகள், திரு.வி.க. நகர் - 41 பகுதிகள், வளசரவாக்கம் - 2 பகுதிகள், தண்டையார்பேட்டை - 1 பகுதி தேனாம்பேட்டை - 19 பகுதிகள், அம்பத்தூர் - 28 பகுதிகள், கோடம்பாக்கம் - 8 பகுதிகள், திருவொற்றியூர் - 22 பகுதிகள், அடையாறு - 13 பகுதிகள், மாதவரம் - 33 பகுதிகள், மணலி - 16 பகுதிகள், சோழிங்கநல்லூர் - 12 பகுதிகள், பெருங்குடி - 11 பகுதிகள், ஆலந்தூர் - 9 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'மாஞ்சா நூல் விவகாரத்தில் தேவைப்பட்டால் குண்டர் சட்டம்...!'