தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் ஆர்.ராஜகோபால் கடந்த ஆண்டு நவம்பரில் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து டிசம்பர் முதல் வாரத்தில் 4 தகவல் ஆணையர்களும் பதவி விலகினர். தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் ஏற்பட்ட இந்த காலியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. இதனையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பத் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் ஒரு தேடல் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது.
இந்நிலையில் தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்த நபர்களின் பட்டியலை அதனை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி முதலமைச்சரிடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
அரசமைப்புச் சட்டம் சார்ந்த பதவிகள் என்பதால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் வெளியிடப்படும்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவரும் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: எம்.பி., சீட்டுக்கு காய் நகர்த்தும் கமல் - டிடிவி தினகரன் சாடல்