சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகியதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (பிப். 8) அவர் தமிழ்நாடு வரவுள்ளார்.
இந்தச் சூழலில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தற்போது சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டிவருகின்றனர். சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டும் அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
நாளை மறுநாள் சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு வரவுள்ள நிலையில், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் ஆலோசனையாக இந்தக் கூட்டம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சசிகலா வருகையால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்பதில் தெளிவான ஒரு முடிவை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்க வாய்ப்பிருக்கிறது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற 12,110 கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்து அறிவித்தார்.
இன்று நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயக் கடன் தள்ளுபடி, அரசின் சாதனைகளை போஸ்டர் அடித்து ஒட்டுமாறு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களிடம் அறிவுறுத்தப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: சசிகலா காரில் அதிமுக கொடி, டிஜிபி.,யிடம் புகாரளித்த அமைச்சர்கள்: சட்டம் என்ன சொல்கிறது?