சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் மற்றும் துறை சார்ந்த மானியக்கோரிக்கை அறிவிப்புகள் ஆகியவற்றை நிறைவேற்ற அமைச்சர் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட பணிகள் துவக்கப்பட உள்ளது.
இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் பல அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தங்கும் விடுதிகள் மற்றும் அன்னதானக்கூடம், முடிகாணிக்கை செலுத்தும் இடம், வியாபார கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்தும் இடம், அவசர ஊர்திகள், யானை பராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்தும் இடம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நீண்ட நேரம் சாமி தரிசனத்திற்கு காத்திருக்காமல், நேர ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஏற்கனவே ஆலோசனை செய்யப்பட்டிருந்தது. மேலும், அன்னதான கூடத்தில் ஒரே நேரத்தில் 1000 பேர் உணவு உண்ணும் வகையில் கூடம்,
பக்தர்கள் காத்திருக்கும் அறைகளில் தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்படுத்துதல் போன்ற பணிகளும் பெருந்திட்ட பணிகளின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனைத்தொடர்ந்து கோயில் பகுதியை சுற்றிலும் பனை பொருட்கள் மற்றும் கடற்சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் தொடங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.300 கோடி செலவில் பணிகள் நடைபெற்று, இரண்டு வருடத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிய நான்..! - சசிகலா