இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல் பார்வையாளர்கள் உடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (மார்ச் 3) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
ஐந்து மாநிலத் தேர்தல் பார்வையாளர்களுடன் தேர்தலை சுமுகமாக, வெளிப்படையாக நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இதில் தேர்தல் பார்வையாளர்களின் பணிகள் என்ன, கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் என்ன என்பது குறித்தும் சுனில் அரோரா விளக்கினார்.
இதில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள், அந்தந்த மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கூட்டங்களில் பங்கேற்றனர்.
இதில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, ஐஏஎஸ் அலுவலர்கள், ஐஆர்எஸ் அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் என 50 பேர் பங்கேற்றனர்.
பிற மாநிலத் தேர்தல் பணிக்காகத் தமிழ்நாட்டிலிருந்து தேர்வுசெய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அலுவலர்களும் (தேர்தல் பார்வையாளர்கள்), ஐஆர்எஸ் அலுவலர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதேபோன்று பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு பார்வையாளர்களாக வரவுள்ள அலுவலர்கள், அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வித பிரச்சினையும் இன்றி சுமுகமான முறையில் நடத்துவது, தேர்தல் விதிமுறைகளை 100 விழுக்காடு அமல்படுத்துவது, தேர்தலில் பண நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவது, விதிமீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது, வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கினால், அவற்றைக் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அந்தந்த மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர்களுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார்.