செப்டம்பர் 1 முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலோ, அல்லது நேரடியாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலோ பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் அறிக்கையாக முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் சென்னை வந்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பள்ளிகளைத் திறக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். அப்போது பேசிய அன்பில் மகேஷ் பொய்யமொழி, மருத்துவத் துறை வல்லுநர்கள் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பார் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (செப். 28) கரோனோ கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தல் முடிந்தபின் அக்டோபர் 2ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: இறுதி முடிவு