கடலூர் மாவட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரியான செல்வமுருகனை திருட்டு வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதான அவர் விருதாச்சலம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 4ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார்.
இதுதொடர்பாக நெய்வேலி ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது கொலை வழக்கு பதியக்கோரியும், கணவர் உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய கோரியும் செல்வமுருகனின் மனைவி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பிரேமா தரப்பில், கணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதிலிருந்தே பல விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், உடலில் 7 காயங்கள் இருந்ததாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. தன்னுடைய ஒப்புதலோ? கையெழுத்தோ? இல்லாமல் உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், தன்னை மாஜிஸ்திரேட் விசாரிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
அப்போது மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரித்ததாகவும், செல்வமுருகன் உடலை மீண்டும் உடற்கூராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கில் தங்களையும் அனுமதிக்கக்கோரி முறையீடு செய்யப்பட்டது. அரசுத் தரப்பில், சிபிசிஐடி-யின் அறிக்கையை நீதிமன்றத்திற்கு மட்டும் தாக்கல்செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
உடற்கூராய்வு விதிமுறைகளுக்குள்பட்டு செய்யப்பட்டதால், மீண்டும் செய்ய அவசியம் இல்லை எனவும், மாஜிஸ்திரேட் விசாரிக்கவில்லை எனக் கூறுவது தவறு எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, உடற்கூராய்வு குறித்த பிரேமாவின் கோரிக்கையை விருதாச்சலம் மாஜிஸ்திரேட் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, பிரேமாவின் வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: வட, தென் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்