அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட அம்முண்டி கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அம்முண்டி கிராமத்தில் பட்டியலின, பழங்குடியின குடும்பத்தினர் எவரும் இல்லை எனக் கூறி, அதனால் பஞ்சாயத்துத் தலைவர் பதவியைப் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆயிரத்து 701 பேர் வசிக்கும் அம்முண்டி கிராமத்தில் 284 பட்டியலினத்தவர்களும், 11 பழங்குடியினத்தவர்களும் வசிப்பதாகத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் செல்வேந்திரன் தெரிவித்தார்.
தற்போது நடக்கவுள்ள தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை எனவும், பஞ்சாயத்துத் தலைவர் பதவியைப் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் மனு அளித்துள்ளதாக, மனுதாரர் தரப்பில் முன்னிலையான கே. பாலு தெரிவித்தார்.
இதற்கு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், அடுத்த ஆறு மாதங்களில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அம்முண்டி கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவியைப் பொதுப் பிரிவினருக்கு மாற்றக் கோரி மனுதாரர் அளித்த மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: சசிகலாவுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து