சென்னை: கரூர் மாவட்டம், இரும்பூதிப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தேயிலைத் தோட்ட பணிக்காக தனது மூதாதையர்கள், இலங்கைக்கு அழைத்து சென்றதாகவும், இலங்கையில் பிறந்த இந்திய பிரஜையான தான், 1990ஆம் ஆண்டு தாயகம் திரும்பியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்திய குடிமகனான என்னை இலங்கை அகதிகள் முகாமில் சேர்த்துவிட்டனர். எனக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு தான் அனுப்பிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், தாயகம் திரும்பியோருக்கான சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன், மனுதாரர் கடந்த ஜனவரியில் அளித்த கோரிக்கை மனுவை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - ஸ்டாலின்