சென்னை: பிரதமர் மோடி குறித்துப் பேசியது தொடர்பாக, அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால், நாடெங்கும் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, “இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம்” என்ற தலைப்பில், இளைஞர் காங்கிரஸ் கல்யாணசுந்தரம் தலைமையில், வாயில் கருப்பு துணி கட்டியபடி, புதுச்சேரி காமராஜர் சிலையின் கீழ், காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், தமிழகச் சட்டமன்றத்திற்குக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.
தமிழக சட்டசபையில், ராகுல் காந்தியைப் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ததைக் கண்டித்து, அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்தனர்.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு, அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். மேலும், ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன தீர்மானம் மேற்கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை குறித்த விவாதம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மோடியே, பிஜேபியே,ஜனநாயக படுகொலையைச் செய்யாதே, அரசியலமைப்பு சட்டத்தைச் சிதைக்காதே, வன்மையாகக் கண்டிக்கிறோம், உள்ளிட கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "ராகுல் காந்தியை 24 மணிநேரத்தில் தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள் என்றும் ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது என்றும் கூறினார். மேலும் அவர், ஹிட்லர், முசோலினி ஆட்சியில் கூட இந்த அளவிற்கு இல்லை என்றும், இது முழுக்க முழுக்க மோடி அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ் க்கும் எதிராக நடக்கும் போராட்டம் என்றும் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கிறோம் என்றும் சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்க இருப்பதாகவும், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக, சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம்" என்றும் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை வழக்கு - அமலாக்கத்துறையை எதிர்த்து கேசிஆர் மகள் கவிதா மனு - இன்று விசாரணை!