சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்தார். கடந்த வாரம் டெல்லி சென்று தேசிய தலைவர்களையும் சந்தித்தார்.
பிறகு சென்னை திருப்பிய போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரை, காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். கடந்த 16ஆம் தேதி காலை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இன்று (மார்ச்.22) காலை முதல் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர் வி.ஆர்.சிவராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவ சிகிச்சைக்குப்பின் நலமுடனும் இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நலம் நன்றாக இருக்கிறது என்றும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்து உள்ளனர்.
இன்று பகல் 11.00 மணி அளவில் அமெட் பல்கலைக்கழக வேந்தரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான டாக்டர் நாசே ஜே.ராமச்சந்திரன், மருத்துவமனையில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது உடல் நலம் சம்மந்தமாக நேரிலும், தொலைபேசி மூலமும் மிகுந்த அக்கறையோடும், ஆர்வமுடனும் கேட்கும் காங்கிரஸ் பேரியக்க சகோதர, சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பூரண நலத்துடன் விரைவில் நம்மை சந்திப்பார்" என குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டதாகவும், தற்போது இருதய பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தான் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "திமுக என்றாலே வன்முறை கட்சி தான்" - ஹெச். ராஜா!