சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து பெரம்பூர் ரயில் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பலராமன், விஜய் வசந்த் ஆகிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ கூறுகையில், "பாஜக அரசின் யோகி ஆதித்யாநாத் ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டாருக்கு எதிராக என்னென்ன செய்ய முடிகிறதோ அதை செய்து வருகிறார்கள். பாஜக ஆட்சியில் நடிகர் தற்கொலைக்கு கொடுக்கும் முக்கியத்துவம், உ.பி.யில் இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை திசை திருப்புவதற்காக எது வேண்டுமானாலும் செய்யப்படும். சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகைக்கு அளிக்கும் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கல்விக் கொள்கையில் மொழியை கற்று கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதனால் மட்டுமே கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தேன். இதில் மொழித்திணிப்பு என ஏதும் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமே கூறினேன். இதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பும் கோரிவிட்டேன்" என்றார்.