சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு வளைகுடா நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானத்தில், மருத்துவ உபகரணங்கள் பெருமளவு வந்திருந்தன. கரோனா நெருக்கடி காரணமாக, மருத்துவ உபகரணங்களை சுங்கச் சோதனை முடித்து விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற விதிமுறையுள்ளது.
இதனால், சுங்க அலுவலர்கள் பார்சல்களை விரைந்து ஆய்வு செய்தனா். அப்போது, மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் 6 பார்சல்கள் அபுதாபியிலிருந்து, தூத்துக்குடி மாவட்ட முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தப் பார்சல்களை பிரித்து பார்த்த சுங்கத் துறையினர், 63 பண்டல்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர்.
இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.8 லட்சமாகும். இதையடுத்து, சுங்கத் துறையினர் சிகரெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி முகவரி போலியானது என்று தெரியவந்தது. இது குறித்து சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதேபோல்,கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து, ஆந்திர மாநிலத்திற்கு வந்த ஒரு பாா்சலில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: பேருந்து கட்டணம் உயர்வு