சென்னை நகரில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் தொற்றுப் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை, மருத்துவ துறை,காவல்துறை என அனைத்து துறையினரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்று கரோனா பாதித்தவரை அழைத்துவருவது, ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என பல்வேறு தடுப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தீயணைப்புதுறையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர், ஊர்காவல் படை என அனைவருக்கும் தொற்று பாதித்துள்ளது. மேலும் சென்னை காவல்துறையில் இன்று மட்டும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
டிபி சத்திரம் காவலர் குடியிருப்பில் ஒருவருக்கும், கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் ஒருவருக்கும், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலருக்கும், மாம்பலம் காவலர் குடியிருப்பில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதே போல் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் (Pcc section) வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இவரது கணவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார். தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதே போல் சென்னை புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசிக்கும் Corecell security branch-ல் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவருக்கு தலைமை செயலகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 5-ம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் இன்று அவருக்கு உறுதியாகி உள்ளது. மேலும் கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தமிழ்நாடு சிறப்பு படை காவலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை உதவி ஆய்வாளராக உள்ளார். இவரும்தனிமைப்படுத்தப்பட்டுஉள்ளார்.