சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விநாயகர் சதுர்த்தியன்று (செப்டம்பர் 10) வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதே நாளில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் இரண்டையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். பெரும்பாலான இடங்களில் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்கை பேனர் வைத்தும், போஸ்டர் அடித்து ஒட்டியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆட்டை வெட்டி அபிஷேகம்
ஆனால் ஒரு சில ரசிகர்கள், அண்ணாத்த போஸ்டருக்கு ஆட்டின் தலையை துண்டித்து, அதன் ரத்தத்தால் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணாத்த போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்ததற்கு ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “‘அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட் – லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளை முடியை மறைக்காதது ஏன்? - தந்தைக்கு சமீரா தந்த பதில்