தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியரர்களுக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையில், தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 23, 27ஆம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும், எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புகள் முன்கூட்டியே குறிப்பிடவில்லை.
இந்நிலையில், தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த அறிவிப்புகள் முன்கூட்டியே அளிக்கப்படாத நிலையில், ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு செல்லாது என அறிவிக்கக்கோரி, தமிழ் வழிக்கல்வி பயின்ற ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி தேர்வர்களின் வாதங்களை ஏற்று கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக செப்டம்பர் ஆறாம் தேதிக்குள் விளக்கமளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அவர் உத்தரவிட்டார்.