தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில், ஐந்தாவது முறையாக காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 'Comprehensive Guidelines COVID-19' என்ற கரோனா தொற்றிற்கான விரிவான வழிகாட்டுதல் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மருத்துவர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ், மருத்துவ வல்லுநர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!