சென்னை: சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டும் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 16) புகார் அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே சொந்தமாக கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது மனைவி ரூபாவதியும் அடிக்கடி கூரியர் நிறுவனத்திற்கு வந்து செல்வார். அப்போது முத்தியால்பேட்டை காவல் நிலைய ஓட்டுநர் பெஞ்சமின் பிராங்கினுடன், ரூபாவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சியால் வெளிவந்த உண்மை
பின்னர் இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் ரூபாவதியிடம் இருந்து ரூ.3 லட்சம், 3 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை பெஞ்சமின் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ரூபாவதி திடீரென தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரிடம் நான் விசாரித்தபோது, கடந்த 1 வருடமாக பெஞ்சமினுடனான உறவு குறித்து அவர் தெரிவித்தார்.
ஆபாசக் காணொலிகளை வெளியிடுவதாக மிரட்டல்
மேலும் இருவரும் தனிமையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆபாசக் காணொலிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டி பெஞ்சமின் பலாத்காரம் செய்து வருவதாகவும், ரூபாவதி கூறினார்.
ஆனால், மீண்டும் இருவரும் திருமணத்தை மீறிய உறவை கைவிடவில்லை. ரூபாவதியின் அலைபேசியை ஆராய்ந்து, அழிக்கப்பட்ட பல ஆபாசக் காணொலிகளை மீட்டெடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இருப்பினும் பெஞ்சமின் காவலர் என்பதால், புகாரை பெற மறுத்து விட்டனர்.
பணம், நகையை மீட்டுத்தரக் கோரிக்கை
மேலும் ரூ. 10 லட்சத்தை தரவில்லையானால் ஆபாசக் காணொலிகளை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாகவும், காவலர் பெஞ்சமின் மிரட்டுகிறார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார். காவலர் பெஞ்சமின் மீது தக்க நடவடிக்கை எடுத்து, ரூ.3 லட்சம் பணம், 3 சவரன் நகையை காவல்துறையினர் மீட்டுத்தர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு!