இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பாராட்டி அரசியல் கட்சிகள் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டன.
அந்தவகையில் நடிகர் சூர்யா பெயரிலும் அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், "உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த தீர்ப்பு கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை நனவாக்கும். இதற்காக முதலமைச்சருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டு சூர்யாவின் கையெழுத்தும் இருந்தது.
இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தனது ட்விட்டரில் அந்த அறிக்கை போலியானது என விளக்கமளித்தார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் துணைத் தலைவர் மனோஜ் தாஸ் இச்சம்பவம் குறித்துக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், “சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் பேரில் சைபர் கிரைம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சூர்யா பெயரில் வலம்வரும் பொய்யான கடிதம்