சென்னை பெருநகர காவல் ஆணையர் வாட்ஸ்அப் காணொலி அழைப்பின் மூலம் புகார் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனை விரிவுபடுத்தும் வகையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 12 சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்கள், இனி வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை, அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாட்ஸ்அப் காணொலி அழைப்பின் மூலம் பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கென்று 12 காவல் துணை ஆணையர்களுக்கும் பிரத்யேக மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 188 முறை காணொலி அழைப்பின் மூலம் பொது மக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டுள்ளார். அதில் 129 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 புகார்கள் சுமுகமாகப் பேசித் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புகார்கள் பரிசீலனையில் உள்ளன.
ஏற்கெனவே பெருநகர சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை நேரடியாகத் தொடர்புகொள்ள அறிவிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணும் தொடர்ந்து செயல்படும் எனவும்; அதிலும் பொதுமக்கள் வாரத்தில் மூன்று நாள்கள் காவல் ஆணையரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.