சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி பல்வேறு மேடைகளில் இந்து மதத்தைக் குறித்தும், இந்து மத வழிபாடுகளை குறித்தும் அவதூறு கருத்துகளைப்பேசி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், அவரை கைது செய்ய வலியுறுத்தி பாரத் இந்து முன்னணி இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் பிரபு, “வேற்று மதத்தைச் சேர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி தனது மதத்தில் நடைபெறும் மோசடிகளை சுட்டிக்காட்டாமலும், தட்டிக் கேட்காமலும் இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கிப்பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது கண்டனத்துக்குரியது.
இந்து மத மந்திரங்களையும், இந்து மத வழிபாடுகளையும் சர்ச்சைக்குரிய வகையில் லியோனி விமர்சித்து வருவது இந்துக்களின் மனதைப்புண்படுத்தும் வகையில் உள்ளது. திண்டுக்கல் ஐ.லியோனியை தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக அரசு நியமித்த முடிவு தவறானது.
அவர் மூலம் இளம்தலைமுறையினர் மனதில் மத வேற்றுமை எனும் நஞ்சை விதைக்கப்படும் சூழல் உருவாகும். தொடர்ந்து இந்து மதத்தை குறித்து தவறான கருத்துகளைப்பேசி வரும் திண்டுக்கல் ஐ. லியோனியை கைது செய்ய வேண்டும். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காதபட்சத்தின் இந்து அமைப்புகள் ஒன்றுகூடி நீதிமன்றத்தை நாடி லியோனியைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்” என்றார்.
இதையும் படிங்க: காதலியை கொலை செய்த செய்தியாளர்... உடலை மறைக்க சென்றபோது சிக்கினார்