சென்னை : கடந்த வெள்ளியன்று நடிகர் ரஜினி நடிப்பில் உருவான ’அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.
இந்தப் போஸ்டரை கொண்டாடும் விதமாக ரஜினி கட் அவுட்டிற்கு ரஜினி ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து, அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.
இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் தமிழ் வேந்தன், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி ஆகிய இருவரும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில் "’அண்ணாத்த’ பட கட் அவுட் வைத்து, ரஜினி ரசிகர்கள் நடுரோட்டில் அனைவரின் முன்பும் காட்டுமிரண்டித்தனமாக ஆட்டை பலி கொடுத்து, ரத்தத்தினால் அபிஷேகம் செய்தது, ஆயுதக் கலாச்சாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தச் செயல் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்தச் செயலுக்கு நடிகர் ரஜினி தரப்பில் எந்த விதமான கண்டன அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ரத்த அபிஷேகக் கலாச்சாரத்தை வளர விடாமல் உடனடியாக தடுக்கும் பொருட்டாக, காவல்துறை, அபிஷேகம் செய்த நபர்கள் மீதும், இச்செயலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க : நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்