சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிறதுறை பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத்தேர்வு, 2024ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் பட்தாரி ஆசிரியர்கள், வட்டார மைய பயிற்றுநர்கள் பணியில் சேர்வதற்கு அக்டோபர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தவர்கள், தங்களின் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஜனவரி 7ஆம் தேதி நடத்த உள்ள தேர்வினை 41 ஆயிரத்து 478 பேர் எழுத உள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் வகையில், தேர்விற்கு ஒரு வார காலம் முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளதால், தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணிக்கான தேர்வு: பகுதி 1-இல் தமிழ் பாடத்தில் 30 கேள்விகளுடன் 30 நிமிட தேர்வாக இருக்கும். இந்த தேர்வில், 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுபவர்களின் முதன்மைத் தேர்வு விடைத்தாள் மட்டுமே திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பகுதி 2 மூன்று மணிநேர தேர்வாக நடைபெறும். இதில் 150 கேள்விகள் இடம்பெறும். பொதுப் பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும், இதர பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்களாக இருக்கும்.
இதையும் படிங்க: குரங்கு கடித்ததால் 10 தையல் போட்ட ஆட்டோ ஓட்டுநர்.. கும்பகோணத்தில் பரபரப்பு!