சென்னை: பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியில் 5,861 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிட்டு 4 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட நிலையில், போட்டித் தேர்வினை நடத்துவதா? என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக 2018-ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அரசாணை 149 பிறப்பித்து, போட்டித் தேர்வை கொண்டு வந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால், அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர். ஆசிரியர் பணிக்கு செல்ல தனியாக போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 60 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர்.
அதன்பின் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்தி, அதனடிப்படையில் தான் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு முதல்முறையாக போட்டித்தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
2018-ஆம் ஆண்டு போட்டித் தேர்வு திணிக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருந்தார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அரசாணை 149 ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த வாரம் அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 3 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம், மொட்டை அடிக்கும் போராட்டம் போன்றவற்றையும் நடத்தினர்.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா திருத்தப்பட்ட ஆண்டு கால அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதில், பட்டதாரி ஆசிரியர் பணியில் 1,874 பேர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியர் பணியில் 3,987 பேர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என கூறியுள்ளார். பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியில் 5,861 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க: 10 ஆண்டுகளில் அதிமுக அடித்த கொள்ளையை ஒரே ஆண்டில் அடித்து திமுக சாதனை - சீமான்