சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி, சவுந்தரராஜன் கடந்த 2012ஆம் ஆண்டு திருமண ஊர்வலத்தில் பங்கேற்று மணமக்கள் முன் நடனம் ஆடியுள்ளனர். இதை அதே ஊரை சேர்ந்த காந்தி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சில நாட்களுக்கு பின் தனியே சென்று கொண்டிருந்த காந்தியை வழிமறித்த பாலாஜி மற்றும் சவுந்தரராஜன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியால் குத்தவில்லை என்பதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென குற்றம் சாட்டப்பட்ட இருவர் தரப்பிலும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பாலாஜிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகவும், சவுந்தரராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் எம்.பி. மரணத்தில் திடீர் ட்விஸ்ட்.. திட்டம்தீட்டி கொலை செய்தது அம்பலம்