சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னணி தலைவருமான மூ. வீரபாண்டியன் சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று (செப். 04) மாலை மூ.வீரபாண்டியன் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஸ்ரீ சாய் குடியிருப்பு நான்காவது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் வீரபாண்டியனை வழி மறைத்து கத்தி மற்றும் இரும்பு ஆயுதங்களால் கடுமையாக தாக்கி உள்ளனர். அப்போது வீரபாண்டியனின் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வருவதைக் கண்டு அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மூ.வீரபாண்டியனை தாக்கியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், சமூக விரோத சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமை பெண் திட்டம்’ நாளை தொடக்கம்